Saturday, February 7, 2015

மாணவர்கள் கேலி செய்ததால் விடுதியில் 10–ம் வகுப்பு மாணவி தற்கொலை

மாணவர்கள் கேலி செய்ததால் விடுதியில் 10–ம் வகுப்பு மாணவி தற்கொலை

மாணவர்கள் கேலி செய்ததால் விடுதியில் தங்கிப்படித்த 10–ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் எழுதி வைத்திருந்த உருக்கமான கடிதத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

10–ம் வகுப்பு மாணவி 

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே உள்ள புதுப்பாளையத்தை அடுத்த கீழ் கொல்லை கிராமத்தை சேர்ந்தவர் தாமோதரன், இவருடைய மனைவி ராணி. இருவரும் கூலி தொழிலாளர்கள்.

இவர்களுடைய மகள் லாவண்யா (வயது 15), ஜவ்வாதுமலையில் உள்ள தனியார் பள்ளி விடுதியில் தங்கி 10–ம் வகுப்பு படித்து வந்தார்.

நேற்று காலை விடுதியில் தங்கியிருந்த மாணவிகள் குளிக்க சென்றனர். ஆனால் லாவண்யா மட்டும் அறையில் இருந்தார். மற்ற மாணவிகள் குளித்து விட்டு அறைக்கு திரும்பியபோது அறையின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது.

தூக்குப்போட்டு தற்கொலை


ஜன்னல் வழியாக பார்த்தபோது லாவண்யா தூக்கில் பிணமாக தொங்கினார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த மற்ற மாணவிகள் விடுதி காப்பாளருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து போளூர் போலீசார் சென்று மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக போளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அந்த அறையில் மாணவி லாவண்யா எழுதி வைத்திருந்த கடிதத்தில் உருக்கமான தகவல்கள் இருந்தன. அதனை ஜவ்வாதுமலை போலீசார் கைப்பற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

உருக்கமான கடிதம்

மாணவி லாவண்யா எழுதி வைத்திருந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:–

‘‘அம்மா என்னை மன்னிச்சிடு, எனக்கு இந்த உலகத்தில் வாழ பிடிக்கவில்லை, அதனால் வேறு உலகத்திற்கு போகிறேன். கண்டிப்பாக உங்களை பார்க்க ஒரு நாள் வருவேன். பாப்பா, தம்பி, அப்பா, ஆயா, மாமா, அக்கா, சொக்கநாதன் எல்லோரையும் பார்க்க ஒரு நாள் வருவேன்.

பாப்பாவை மட்டும் எந்த விடுதியிலும் சேர்க்காதே, அப்படி சேர்த்தால் பெண்கள் மட்டும் இருக்கிற விடுதியில் சேர்க்க வேண்டும். ஆண்கள் படிக்கும் பள்ளியில் மட்டும் சேர்க்காதே. என்னை (கலாய்க்கிற) கேலி செய்தவங்க நல்லாவே இருக்கக்கூடாது. அவர்களை நான் சும்மா விட மாட்டேன். என்னுடைய சாவை நானே தேடிக்கொண்டேன்’’.

மேற்கண்டவாறு கடிதத்தில் எழுதப்பட்டுள்ளது.

இந்த கடிதத்தின் மூலம் மாணவர்கள் கிண்டல் செய்ததால்தான் லாவண்யா தற்கொலை செய்துள்ளார் என்று போலீசார் கருதுகிறார்கள். அதன் அடிப்படையில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment